Thursday, January 9, 2014

தினம் ஒரு திருப்புகழ் - ஞானம் பெற

தினம் ஒரு திருப்புகழ் -  ஞானம் பெற  - நாள்  - 52


ராகம்: நாட்டைக்குறிஞ்சி / ஜோன்புரி    .....    தாளம்: கண்டசாபு 

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.

கருத்துரை: பிரணவத்தின் பொருளை சிவபெருமான் உள்ளமானது 
குளிரும்படி இரு செவிகளிலும் உபதேசித்த ஞானகுருவே! உமாதேவியாருடைய திருக்குமாரரே! வெண்ணையைத் திருடி
உரலில் கட்டுப்பட்ட கண்ணபிரானும்,ரகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமசந்திரருமாகிய விஷ்ணுமூர்த்தியின்  மருகரே!, தெய்வ அம்மையாருக்கும், குறவர் குடியில் தோன்றிய வள்ளியம்மையாருக்கும் மணவாளரே! திருஆவினன் குடியில் எழுந்தருளியவரே! நின் செயலை விரும்பி உள்ளம் நினையாமல், உலகில் வீணாக அலைந்து திரிகின்ற அடியேனை பயப்படாதே என்று சொல்லி வந்தருள வேண்டும், 
ஊன சரீரத்தை விட்டு ஞானசரீரத்தைப் பெறவும், துன்பமானது நீங்கவும், திருவருள் ஞான இன்பத்தைக் கொடுத்து அருள் புரியவேண்டும். 

தொடரும் திருப்புகழ் ..................................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment