Friday, September 7, 2012

பெருமாள் கோயிலில் மழை வேண்டி பாடல்



தூத்துக்குடி பெருமாள் கோயிலில் மழை வேண்டி பாடல் பாடி வழிபாடு!




தூத்துக்குடி பெருமாள் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளும், இரண்டு மணிநேரம் தொடர்ச்சியாக தேவைக்கு மழை பெய்ய ஆழிமலைக் கண்ணா பாடல் பாடப்பட்டு கூட்டு வழிபாடு நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை இல்லாததால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு கடும் கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. மழை இல்லாததால் பல்வேறு தொழில்கள் முடங்கும் நிலை உருவாகி இருக்கிறது. மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் மழை வேண்டிய தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சிறப்பு பூஜைகள், யாகங்கள், வழிபாடுகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நேற்று மழை வேண்டி கோபாலவல்லிதாசர் தலைமையில் திருப்பாவையில் உள்ள 8 வரி பாடல்கள் தொடர்ச்சியாக பாடப்பட்டன.

 கோபாலவல்லிதாசர் ஒவ்வொரு வரியாக பாட கூடியிருந்த பெண்கள், ஆண்கள் அதனை திரும்ப பாடி மழைக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.

"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல், 
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி, 
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து, 
பாழிய் அம் தோளுடை பற்பனாபன் கையில், 
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து, 
தாழாதே சாரங்க முதைத்த சர மழை போல், 
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும், 
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்" 

என்ற 8 வரியினை தொடர்ந்து பாடி மழைக்காக கூட்டு வழிபாடு நடந்தது. என்றைக்கும் பிரார்த்தனை வீண் போகாது, தேவைக்கு நிச்சயமாக மழை பெய்யும். தண்ணீர் பஞ்சம் நீங்கும். நாம ஜெபம் மீது நம்பிக்கை வைத்தால் 
நாம் வாழுவதற்கு தேவையான மழை நிச்சயமாக பெய்யும். 

பகவானை இதுபோன்ற கூட்டு பிரார்த்தனை மூலம் வேண்டும் 
போது பகவான் நிச்சயமாக மழையை கொடுப்பார். எல்லா ஜீவராசிகளும் வாழ்வதற்கு மழை கொடுப்பார்.நம்மை மறந்து மழைக்காக ஜெபிப்போம். அதன் மூலம் பலன் எல்லோருக்கும் வரும். தூத்துக்குடியில் நிச்சயம் மழை வரும். பகவான் அதனை கொடுப்பார். எல்லா ஜீவராசிகளும் அதன் மூலம் இன்புறும் என்றும் கோபாலவல்லிதாசர் பேசினார். 

காலை பத்து மணிக்கு துவங்கிய மழைக்கான கூட்டு பிரார்த்தனை 12 மணி வரை நடந்தது. இதில் அதிகமான பெண்கள் பங்கேற்றனர்.  கூட்டு வழிபாடு முடிந்தவுடன் மழை வேண்டி வைகுண்டபதி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த பூஜையில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கருணை  மழை பொழியும் கண்ணன் தன் அருள் மழையால் 
வான் மழை தாரானோ ...கேட்டவர்க்கு கொடுப்பவன் கண்ணனல்லவா 

No comments:

Post a Comment