Friday, September 7, 2012

இயற்பகையார்



இயற்பகையார் 



சோழநாட்டில் ஒரு நகரம் காவிரிப்பூம் பட்டினம். இங்கே வணிகர் குலத்தில் பிறந்து, வள்ளல் தன்மையே வாழ்வாக இருக்கும் ஒரு இல்லறஞானி இயற்பகையார். அடியராய் காண்போர்கள் விரும்புவதை விரும்பியபடியே அளிப்பது இவரது தனித்தன்மை.

இவரது சிறப்பினை உலகம் அறிய வேண்டாமா என்ன? சிவபெருமான், தன்னை ஒரு நீறு பூசிய, காமுகத் தூர்த்தராய் மாற்றி இவரது இல்லம் வருவார். வரவேற்ற அடியரிடம், வந்தவரும் பேசுவார். “உன் வள்ளல் திறம் அறிவோம். ஒருபொருளை நாடி வந்தோம். அளிக்க இயலும் என்றால் அதைச் சொல்வோம்” என்க, நம்மவரும், “இருக்கும் பொருளைக் கேளுங்கள், இல்லையெனச் சொல்ல மாட்டேன். வேண்டியதைக் கேட்பீர்” என்பார்.வந்த காமுகரும், கூச்சம் இன்றி, உமது மனைவியை நாடி வந்தோம் என்று சொல்ல, எந்தவித அதிர்ச்சியும் இன்றி தம்மிடம் உள்ளதைக் கேட்டாரே என்று மிக மகிழ்ந்து, உள் விரைந்து மனைவியிடம் இந்தச் செய்தியைச் சொல்வார். முதலில் கலங்கும் மனைவியும் உடன் தெளிந்து, இசைகிறார். மறையவரைத் தொழுது உடன் செல்வார்.

இவரை நான் அழைத்துச் செல்லும் போது எதிர்க்கும், உற்றார் சுற்றத்தாரிடம் இருந்து என்னைக் காப்பாற்றி எனக்குத் துணை வர வேண்டும் என்பார். இயற்பகையும் இது குறித்து நான் முன்னமே எண்ணவில்லையே என வருந்தி வாளுடன் வெளிவருவர். எதிர்த்த யாவரையும் வீழ்த்தும் இயற்பகையும் தூர்த்தருக்குத் துணையாக திருச்சாய்க்காடு என்ற இடம் வரை வருவார். “இனிப் பகையில்லை. இயற்பகையே நீர் திரும்பும்” எனக் கூற, எந்தவித நினைப்பும் இன்றி இயற்பகை, திரும்பியும் பாராது செல்வார். இக் காட்சியைக் காணும் சிவபெருமான், தான் கடவுள் என்பதையும் மறந்து, இப்படியும் ஓர் பாத்திரத்தை நாம் படைத்திருக்கிறோமா என வியந்து, திகைத்து, அதிர்ந்து குழறி, ஓர் ஓலத்தை எழுப்புகிறார்.

ஓலம் கேட்ட இயற்பகை என்னவோ ஏதோ என்று திரும்ப, ஓலமிட்ட மறையவரைக் காணோம். மனைவி மட்டும் நிற்கிறார். இறைவன் வான் காட்சியாக இடபமேறி, இமையவள் தன்னோடு அருள்புரிய, இயற்பகையும், இணையாளும் சிவலோகம் அடைவர். இறந்த சுற்றத்தாரும் உயிர் பெற்று மகிழ்வடைவர்.

பற்றறுக்கும் பாங்கில் மனைவியும் இயற்பகைக்கு கொடுக்கும் ஒரு பொருளாகத்தான் தெரிந்தாள். இறைவனையே அதிரச் செய்தான் இயற்பகை. பற்றறுக்கும் செய்தியைப் பாருக்கு அறிவித்த பரம்பொருளின், பசுந்திறத்தில் பரவசத்தில்நாம் ஆழ்வோம்!

No comments:

Post a Comment