Monday, September 10, 2012

காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் திருக்கோயில்


உலகளந்த உத்தமன்: காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் திருக்கோயில்
மகாபலி சக்ரவர்த்தி. அசுர குலத்தில் உதித்தவன்தான் இருந்தாலும் நல்லாட்சியால் மக்களின் மனத்தில் இடம்பிடித்தான். மகாவிஷ்ணுவின் பக்தன் பிரகலாதனின் பேரன் ஆயிற்றே! மகிழ்ச்சிப் பெருக்கில் மக்கள் திளைத்திருக்க, அவன் பெருமையோ மூவுலகும் பரவியிருந்தது. மேன்மேலும் தான தர்மங்கள் செய்தான். தானம் அளிக்க அளிக்க... கொடுப்பவன் நானே என்ற அகங்காரமும் அவன்
உள்ளத்தே குடிகொண்டது. தர்மாத்மாவான மகாபலியை ஆட்கொள்ளத் திருவுள்ளம் கொண்டார் மகாவிஷ்ணு.

அதே நேரம்... தன் அசுர குல வழக்கப்படி, தேவேந்திரனை எதிர்கொண்டான் பலி. ஆனால் தோற்றான். அதனால் தன் வலிமையைப் பெருக்கிக் கொள்ள குலகுரு சுக்ராச்சாரியார் மூலம் விக்ரஜித் எனும் வேள்வி செய்தான். அதில் வந்த தங்க ரதத்தில் ஏறி தேவலோகம் சென்று போரிட்டான். தேவலோகமான அமராவதிப் பட்டணம் பலியின் வசமானது. கவலை கொண்ட தேவேந்திரன், பிரம்மாவிடம் சென்றான். அவரோ, மகாபலி பிருகு வம்ச ரிஷி பார்கவன் துணையுடன் இதைச் சாதித்துள்ளான். அவனுக்கு தேவலோகத்தைக் கட்டியாள விருப்பம். அவனை இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தன்னையே அவன் அழித்துக் கொள்வான். நீ மகாவிஷ்ணுவை சரணடை என்றார். இந்திரனும் தன் கவலையை விஷ்ணுவிடத்தே வைத்தான். பெருமான் அவனுக்கு அபயம் சொன்னார்.

இங்கே பூலோகத்தில் தன் புத்திரர்களான தேவர்களின் சிரமம் கண்டு வருந்திய அதிதி, தன் கணவரான காச்யபரிடம் வேண்டினாள். அவர் யோசனைப் படி, அதிதி மகாவிஷ்ணுவை எண்ணி தவம் செய்தாள். அவள் முன் தோன்றிய விஷ்ணு, மகாபலியை ஒன்றும் செய்ய முடியாது. அந்தணர் துணையுடன் ஆட்சி நடத்தும் அவனை, வேள்வியின் பயனாய் பலம் பெற்றுள்ள அவனைப் போரில் வெல்ல முடியாது. ஆனாலும் உன் தவத்துக்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். நாமே உனக்கு மகவாகப் பிறப்போம் என்றார் மகாவிஷ்ணு. அதன்படி, புரட்டாசி திருவோணத்தில் காச்யபருக்கும் அதிதிக்கும் புத்திரராகத் தோன்றினார் விஷ்ணு. குள்ள உருவினனாய் அந்தணக் குழந்தையாய் வடிவெடுத்த விஷ்ணுவுக்கு, உரிய திருநாமம் சூட்டப்பட்டது. வாமன வடிவெடுத்து வந்த பிரானுக்கு உரிய காலத்தே உபநயனமும் ஆனது. வேத மந்திரங்கள் கற்று முகத்திலே ஒளி மின்ன வலம் வந்தார் வாமனர்.
மகாபலிச் சக்ரவர்த்தி தன் புகழ் மேலும் கூட, வேள்விச் சாலை அமைத்து, பெரியதொரு யாகம் வளர்த்தான். அந்த வேள்விச் சாலைக்கு வந்தார் வாமனர். அவர் உருவம் கண்டு உகந்த மகாபலி, அவர் திருப்பாதம் கழுவி அந்நீரைத் தெளித்துக் கொண்டு பாதம் பணிந்தான். யாகம் சிறப்புற நடந்தது.

யாகத்தின் போது, தானம் செய்ய வேண்டும். மகாபலி எல்லோருக்கும் தானமளித்தான். வாமனரிடமும் தானம் அளிக்க முன்வந்தபோது, வாமனரோ, அதை மறுத்தார். ஆயினும் பலமாக வற்புறுத்தவே, தன் அடியால் அளக்கும் வண்ணம் மூன்றடி நிலம் தானமாகக் கேட்டார். மகாபலிக்கோ சிரிப்பும் கூடவே சிந்தனையும் எழுந்தது. மிகப் பெரிய பூஞ்சோலையையும் தோட்டத்தையும் தருகிறேன்.. வெறும் மூன்றடி எதற்கு என்று கேட்க, வாமனரோ தன் கோரிக்கையில் பிடிவாதம் காட்டினார்.

அப்போதுதான் சுக்ராச்சாரியார் மகாபலியை அழைத்து, வந்தவர் மகாவிஷ்ணுவே என்றும், இந்த தானத்தை நீ தவிர்த்து விடுவாய் என்றும் கூறினார். ஆனால் பலியோ, தன் குலம் உயர்ந்தது என்றும், குலதர்மப்படி கொடுத்த வாக்கை மீறுதல் தகாது என்றும் கூறி, தானம் அளிக்கத் தயாரானான். கெண்டி நீர் எடுத்து தாரை வார்க்கப் போக, சுக்ராச்சாரியார் அதில் இருந்து நீர் விழாவண்ணம் துவாரத்தை ஒரு வண்டின் உருவெடுத்து அடைத்தார்.

வாமனரோ, தர்ப்பையால் அந்த துவாரத்தைக் குத்த, சுக்ராச்சார்யரின் ஒரு கண் பறிபோனது. பின்னர் தானம் பெற்ற வாமனர், விடுவிடுவென வளர்ந்து, விஸ்வரூபம் காட்டி, தன் ஓரடியால் மண்ணுலகை அளந்து, மற்றோரடியால் தேவலோகம் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்டார். மகாபலி தன் சிரம் குனிந்தான். கைகூப்பி நின்று, தலை கனம் தாழ்ந்து அதில் மூன்றாம் அடியை வைத்து அளக்கச் சொன்னான். வாமனர் அவனுக்கு அருள் புரிந்து, பக்தனாயிருந்தாலும், செல்வச் செருக்கு வந்ததால் தனை மறந்த செயல் கூறி, பாதாள உலகை அவனுக்குப் பரிசளித்தார்.

பாதாள உலகு சென்ற மகாபலிக்கு பெருமான் நினைவு ஆக்கிரமித்தது. தான் சிரம் குனிந்து பாதம் கண்டதால், பெருமாளின் விஸ்வரூப தரிசனம் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்ற வருத்தம் மிகக் கூடியது.

விஷ்ணுவிடம் கோரினான் மகாபலி. அவன் விருப்பத்துக்கு மனமிரங்கி, பாதாள உலகத்தில் இருந்து மகாபலி தன் சிரசை வெளிக்காட்ட, விஸ்வரூப தரிசனத்தை அவனுக்கு அளித்தார் மகாவிஷ்ணு.
இத்தகைய புராணக் கதையைக் கொண்டு திகழ்கிறது காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் கோயில்.

சுமார் 60 ஆயிரம் சதுர அடி பரப்பில் மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம். கோயில் இரண்டு பிராகாரங்களை உடையது. மூலவர் உலகளந்த பெருமாள். நின்ற திருக்கோலம், விமானம் ஸாரஸ்ரீகர விமானம், தீர்த்தம் நாக தீர்த்தம். பெருமாள் இங்கே நின்ற திருக்கோலத்தில் 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட நிலையில் தனது இடது காலை விண்ணோக்கித் தூக்கியும், இடது கரத்தின் இரண்டு விரல்களையும் வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டியபடி காட்சி அளிக்கிறார். தாயார் ஸ்ரீ ஆரணவல்லித் தாயாராக அருள் பாலிக்கிறார்.

108 வைணவத் திருப்பதிகளுள் இது திருகாரகம் எனப்படுகிறது. இந்தக் கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்கார்வானம் என மூன்று திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த மூன்று திவ்ய தேசங்களும் வேறு வேறு இடத்தில் இருந்ததாகவும், பின்னாளில் இந்தக் கோயிலுக்குள்ளேயே கொண்டு வரப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இந்த ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசப் பெருமாள்களையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரேயொரு பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

கார்ஹ மகரிஷி பெருமாளைக் குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றதால், அவர் பெயராலேயே காரகம் என வழங்கப்படுகிறது. இந்தப் பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
இந்த உலகம் தனக்குரியதே என நினைத்து ஆணவம் கொள்வதால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து, ஆணவம் அடக்கி, பெருமாள் தன் அருளை முழுமையாக வழங்கி மோட்ச வழி காட்டுகிறார். ஆணவம் நீங்கி, உத்தமனாக வாழ திருவோணத் திருநாளில் இந்த உலகளந்த உத்தமனை வணங்கி உய்வு பெறலாம்.

கோயில் திறக்கும் நேரம்: காலை 7-12 வரை, மாலை 4-8 வரை.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகில், காமாட்சி அம்மன் ஆலயம் செல்லும் வழியில்.