Tuesday, September 11, 2012

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்






          அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் -  பரணி  நட்சத்திரம் 



மூலவர் :               அக்னீஸ்வரர்
தாயார் :                  சுந்தர நாயகி
தல விருட்ஷம் : வில்வம், வன்னி
ஆகம பூஜை :       சிவாகமம்
பழமை :                  1000 - 2000 வருடங்கள்
புராண பெயர் :     திரு நல்லாடை
ஊர் :                         நல்லாடை
மாவட்டம் :           நாகப்பட்டினம்
மாநிலம் :              தமிழ் நாடு



கோவில் திருவிழா :-

இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.


ஆலய தரிசன நேரம்:-

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


கோவில் முகவரி:-

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை-609 306 தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.

தகவல் தொடர்பு:-

+91 4364-285 341,97159 60413,94866 31196

பொதுவான தகவல்:-

பரணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி. 1146-1163 வரை இப்பகுதியை ஆட்சி செய்தான். அவனது காலத்தில் தான் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் இவனது பிரதிநிதியான சோமாந்தோழர் என்பவனால் பிற பகுதிகள் கட்டப்பட்டுள்ளது.இதற்கான கல்வெட்டு கருவறையின் கிழக்கு சுவற்றில் இன்றும் காணப்படுகிறது. தற்போது நல்லாடை என வழங்கப்படும் இவ்வூர் முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத்திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடந்துள்ளது. திருவாதிரையின் போது மாணிக்கவாசகப் பெருமானை அலங்கரித்து ஊர்வலம் வந்துள்ளனர்.

இக்கோயிலில் காசிபன் கூத்தனான மும்முடி சோழபட்டன் என்பவன் தலைமையில் ஊர்சபை கூடி கோயிலை நிர்வகித்து வந்ததும், கோயிலில் திருவிளக்கு எறிக்கவும், இறைவனுக்கு நைவேத்தியம் செய்யவும் மன்னன் உபயமாக நிலம் கொடுத்தது பற்றியும் இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. கோயில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.

பிரார்த்தனை:-

பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:-


பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இத்தலத்தில் ஹோமம் செய்து, சிவனுக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.


தலபெருமை:-


கார்த்திகை மாத பரணி: பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று விசேஷ வழிபாடு செய்வது சிறப்பு. பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும். மேற்கு நோக்கிய கோயில்களில், முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு. இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால், அதனைத் தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது.


தல வரலாறு:-


மிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.

மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார். இதனால் தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாக திகழ்கிறது. இத்தலத்தின் விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தலவிருட்சத்திற்கு என தனி வரலாறு உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட சோழ மன்னும், சிவனேச நாயன்மாரும் சிவனை தரிசிக்க வந்தனர். அப்போது புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்தி வந்தது. உடனே அவர் இத்தலவிருட்சத்தில் மீது ஏறிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து நாயன்மார் அருகில் உள்ள குண்டாங்குளம் சென்ற போது, புலியும் உடன் வந்தது. நாயன்மார் அங்கு வைத்து புலியை சம்ஹாரம் செய்தார். உடனே சிவன் அவருக்கு தரிசனம் கொடுத்ததாகவும் வரலாறு கூறுகிறது.

சிறப்பம்சம்:-

இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.




"பரணியில் பிறந்தவர் தாரணி ஆள்வர்"  , நீங்கள் பரணி நட்சத்திரமா
தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் நட்சத்திர கோவிலை









No comments:

Post a Comment