Wednesday, September 5, 2012

பாளையங்கோட்டை ஸ்ரீராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்


தடைகளை அகற்றும் தயாபரன்





இந்திரனின் மகன் அர்ஜுனன் ஒரு முறை இந்திரலோகம் 
சென்றான். அப்போது இந்திராதி தேவர்கள் அசுரர்களின் 
தொல்லையால் அவதிப்பட்டனர். இந்திரலோகம் பெரும் 
நெருக்கடியில் இருந்தது. தந்தையைக் காண வந்த தனயன் 
இதனால் பெரும் துயரடைந்தான். காரணம் யாதெனக் 
கேட்டான். பிரச்னைக்குக் காரணம் அசுரர்கள் என்றான் 
இந்திரன். "பூலோகத்தில் கடலுக்கு நடுவே உள்ள தோயமாபுரப் 
பெருநகரில் 3 கோடி அசுரர்கள் உள்ளனர். அவர்கள், 
தங்களுக்கென ஒரு நாட்டைக் கொண்டுள்ளனர். அங்கிருந்து 
கிளம்பும் அவர்கள், ஈரேழு பதினான்கு லோகங்களையும் கபளீகரம் செய்துவிட்டு, அவர்கள் நாட்டுக்குத் திரும்பிவிடுவர். சான்றோரும் முனிவரும் அவர்களால் பெரும் தொல்லைகளைச் சந்திக்கின்றனர். இந்திரலோகத்துக்கு வந்து துவம்சம் செய்துவிட்டுச் செல்கின்றனர்' 
என்றான் இந்திரன்.

மனம் வருந்திய அர்ஜுனன் அவர்களை அழித்துவிட்டு வருகிறேன் என்று சபதம் இட்டுச் சென்றான். போர் மூண்டது. அர்ஜுனன் வீசிய அஸ்திரங்கள் அசுரர்களைக் கொன்றன. ஆனால், அசுரர்கள் மீண்டும் மீண்டும் தோன்றினர். இதனால் சோர்வடைந்த அர்ஜுனனுக்கு இந்திரன் அசரீரியாக ஓர் உபாயம் கூறினான். "அசுரர்களுக்கு போரிடும் ஆக்ரோஷ எண்ணம் இருக்கும் வரை உன்னால் அவர்களைக் கொல்ல முடியாது. அவர்கள் போர்க்குணத்தை விட்டுவிட்டு சிரிக்கத் தொடங்க வேண்டும். அவர்களை திசை திருப்பிவிட்டு பிறகு கொல்' என்றான் இந்திரன். எனவே வேறு வழி தெரியாத அர்ஜுனன், தான் அவர்களிடம் தோற்றோடுவது போல் நடித்தான். அர்ஜுனனின் செய்கையைக் கண்ட அசுரர்கள் சிரிக்கத் தொடங்கினர். அந்நேரம் தனது பாசுபத அஸ்திரத்தால் அவர்களை வதைத்தான் அர்ஜுனன்.

இதனால் மகிழ்ந்த இந்திரன், தான் வணங்கிவந்த கோபாலசுவாமி விக்ரஹத்தை அர்ஜுனனுக்குப் பரிசளித்தான். அர்ஜுனனும் தன் உள்ளம் கவர் கண்ணனின் விக்ரஹத்தை மனத்தில் எண்ணி வணங்கி வந்தான். சில நாட்கள் கழித்து, அர்ஜுனனுக்கு நேரில் காட்சி கொடுத்த கண்ணன், "இந்திரனால் உனக்கு வழங்கப்பட்ட என் விக்ரஹத்தை கங்கையில் விட்டுவிடு' என்று கட்டளையிட்டான்.

அதன்படியே கங்கைக் கரைக்குச் சென்ற அர்ஜுனன், கோபால விக்ரஹத்தை கங்கையில் விட்டுவிட்டான். அதே நேரம் தென்பாண்டிச் சீமையில் இருந்து கங்கைக்குச் சென்றிருந்த பாண்டிய மன்னன் கைகளில் அந்த விக்ரஹம் அகப்பட்டது. கங்கையில் கிடைத்த பிரசாதமாக எண்ணி அதை எடுத்துவந்த மன்னன், தன் நாட்டின் தென்னகத்தே கோபால விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்து, அழகிய ராஜகோபாலன் எனும் திருநாமம் சூட்டி, கோயில் எழுப்பினான்.

இவ்வாறு புராணக் கதையைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது, பாளையங்கோட்டை ஸ்ரீராஜகோபால ஸ்வாமி திருக்கோயில். கங்கையைப் போல் புனிதம் வாய்ந்த பொருனை நதிக் கரையில் நெல்லைக்கு அருகே உள்ள பாளையங்கோட்டை நகரின் மத்தியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். இவர், உள்மண்டபத்தில் வேதவல்லி, குமுதவல்லித் தாயார்களுடன் விளங்குகிறார். கோயில் சிற்பக்கலையிற் சிறந்து விளங்குகிறது. தமிழக சிற்பக்கலை பாணியுடன், மதுரா ஸ்ரீகிருஷ்ணர் கோயில் பாணியும் இணைத்து கட்டப்பட்டுள்ள பழமையான கோயிலாகத் திகழ்கிறது.

இந்தக் கோயிலில் செண்பக விநாயகர் சந்நிதி, தசாவதார சந்நிதி, ஆழ்வார்கள், பரமபதநாதர், ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன.

ஆண் குழந்தை பிறக்கும்: இந்தக் கோயிலில் வந்து வேண்டிக் கொண்டால் குடும்பத்துக்கு வாரிசாக ஆண் குழந்தை பிறக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர். அதற்குச் சான்றாக ஒரு பழைய கதையையும் கூறுகின்றனர்.

இந்தக் கோயிலில் அர்ச்சகர் ஒருவர் பெருமாளுக்குப் பணிவிடை செய்து வந்தார். விஷ்ணுப் பிரியரான அவர், தனக்குப் பிறகு தன் வாரிசாகப் பிறக்கும் மகன் பெருமாளுக்கு கைங்கரியம் செய்ய வேண்டும் என்று பெருமாளிடம் சங்கல்பம் செய்துகொண்டார். ஆனால், சோதனைக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகளே பிறந்தன.

பக்தியுடன் உருகி வேண்டினார் அந்த அர்ச்சகர். மீண்டும் அவர் மனைவி கருவுற்றார். பெருமாள் சந்நிதியில் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு மனைவி பெண்மகவைப் பெற்றெடுத்த செய்தியே இம்முறையும் வந்தது. இதனால் ஆத்திரத்துடன், "பெருமாளே உன் கைங்கர்யத்துக்காகத் தானே எனக்கு ஆண் மகவு வேண்டினேன். அதை நீ தர மறுக்கிறாய்' என்று அந்தக் கோபாலனிடம் பேசிய அர்ச்சகர், தன் கையில் வைத்திருந்த ஆரத்தித் தட்டையும் வீசியெறிந்தாராம். அது தரையில் பட்டுத் தெறித்து பெருமாளின் விக்ரஹத்திலும் பட்டது. பெரும் துயரத்துடன் வீடு சென்று பார்த்தபோது, அங்கே ஆண் குழந்தையாக மாறி அது சிரித்துக் கொண்டிருந்ததாம். தன் தவறை உணர்ந்த அர்ச்சகர் கோபாலஸ்வாமியிடம் மன்னிப்புக் கேட்டாராம். அப்போது ருக்மிணி, பாமா சமேதராக ஸ்ரீகிருஷ்ணர் காட்சி தந்து அருளினாராம். இதனால் இந்தப் பெருமாள் அழகியமன்னார் எனப்பட்டார்.

பிரார்த்தனை: இந்த சந்நிதியில் திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் பெற, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க என, பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

திருவிழாக்கள்: பங்குனி பிரமோற்ஸவம், புரட்டாசி சனிக்கிழமை கருடசேவை, வைகுண்ட ஏகாதசி.

திறக்கும் நேரம்:காலை 6 - 11 வரை, மாலை 4-8 வரை.

"இறையருள் பெற இதுவே தருணம் உங்களுடன் தொடர்ந்து 
இவனும் பயனிக்கின்ற்றன்"


No comments:

Post a Comment